![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi33PgDZrgFU1ISJ-_zc9lvWSsS1bcVBDx-NhYsVsFqEb7ja6bbhxgl9uBenKJeFtujclmwDK7k9YmNrgfGTovVVde_NyFxEEtG2N5MYhQtkJ01e4_KT8p-6ELHut6bTVmjRV6MpAss0UN2/w357-h201/head+pain.jpeg style=)
தலைவலியைக் குணப்படுத்த சில வழிகள் இங்கே
தலைவலி தலைவலிக்குப் பொதுவான காரணங்கள், காபி, டீ. மிகுதியாகக் குடிப்பதும், மலச் சிக்கலுமாகும். எனவே காபி, டீ குடிப்பதை இயன்ற அளவு நிறுத்துவதும், மலச்சிக்கல் இல்லாமல் வாழ்வதுமே தலைவலி வராமலிருக்கும் வழிகள்.
மலச்சிக்கலை நீக்க, எனிமாக்குவளையைப் பயன்படுத்தி மலத்தை வெளியேற்றலாம். காலையில் துயில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இயன்ற அளவு பச்சைத் தண்ணீர் குடித்தல், இடையிடையே அவ்வப்போது பச்சைத் தண்ணீர் குடித்தல், அடிவயிற்றில் ஈரத்துணிப்பட்டி, ஈரக்களிமண் பட்டிகள் போடுதல், காலையில் துயில் எழும் முன், படுக்கையில் மல்லாந்து படுத்தவாறு பவன முக்தாசனம் செய்தல், இடுப்புக் குளியல் தொட்டியில் 20 நிமிடங்கள் இடுப்புக் குளியல் எடுத்தல், இரவு படுக்கச்செல்லும் முன்பு சிறிதளவு கடுக்காய்த் தூளைத் தண்ணீரில் கலந்து குடித்தல் ஆகியனவும் மலச்சிக்கல் இல்லாமல் வாழும் வழிகள்.
ஒரு பாத்திரத்தில் இளஞ்சூடான நீர், மற்றொரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீர் வைத்துக் கொண்டு, தலைவலி வரும் பொழுது, இரு பாதங்களையும் இளஞ்சூடான நீரில் நனையும் வண்ணம் சில நிமிடங்கள் வைத்திருந்து, பின் குளிர்ந்த தண்ணீரில் இரு பாதங்களும் நனையும் படி சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இவ்விதம் தலைவலி தீரும் வரை மாற்றி மாற்றி பாதக் குளியல் எடுத்தால், தலைவலி நின்றுவிடும்.
தலைவலி வரும்பொழுது, நெற்றி முழுவதும் ஈரத்துணிப் பட்டி, அல்லது ஈரக்களிமண் பட்டி 20 நிமிடங்கள் போட்டாலும் தலைவலி நிற்கும். பலா மரத்தின் சிறுவேரைப் பிழிந்து, அச்சாற்றை ஓரிரு துளிகள் மூக்கில் விட்டால் நீண்ட நாள் தலைவலி கூட குணமாகும். நொச்சி இலைச்சாறு, வில்வ இலைச் சாறு, எலுமிச்சம் பழச் சாறு ஆகியன அருந்தியும் தலைவலியைக் குணப்படுத்தலாம்.
மூக்கில் நீர் வடிந்து கொண்டிருக்கும் தலைவலிக்கு நொச்சி இலையை நீரில்போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். தும்பைப் பூவின் சாற்றை இருதுளிகள் மூக்கில் இட தும்மலுண்டாகி நீரேற்றத்தாலுண்டான தலைவலி தீரும். ஓமம், மிளகு, பூண்டுத் தோல் மூன்றையும் தூள் செய்து நெருப்பிலிட்டு அதன் புகையை முகர்ந்து வர, மூக்கில் நீர் வடிதல் குணமாகும். வெற்றிலையை நைத்து சாறு எடுத்து, இச்சாற்றுடன் ஐந்து கிராம்பை அம்மியிலிட்டு அரைத்து. இருபக்க பொட்டுகளிலும் கனமாகப் பூசலாம்.
மூன்று வெள்ளைப் பூண்டு பற்களை தைத்து, அதை ஒரு இரும்புக் சுரண்டியில் வைத்து, ஒரு தேக்கரண்டி தேங்காயெண்ணெயை ஊற்றி அடுப்பில் சூடேற்றி, சிவந்து வரும் சமயம் இறக்கி ஆறியபின், அரைத்துப் பொட்டுகளில் தடவலாம். வெற்றிலையை நைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிதளவு கற்பூரம் சேர்த்துக் குழைத்துப் பொட்டுகளில் கனமாகத் தடவலாம்.
குப்பை மேனி இலைச் சாற்றில் கங்கைச் சந்தனம் உரைத்து இருபக்கப் பொட்டுகளிலும் கனமாகப் பூசலாம். சாம்பார் வெங்காயம் பெரிதாக ஒன்றை எடுத்து, குறுக்கு வசமாக மையத்தில் நறுக்கி இருபக்கப் பொட்டுகளிலும் நன்றாகத் தேய்க்கலாம்.
ஒரு கடுக்காய் தோல், பத்து கிராம்பு ஆகியவற்றை ஒருகோப்பை நீரில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். சுக்கை உரை கல்லில் உரைத்து, அதை இரு பக்கப் பொட்டுகளிலும் வட்டமாகக் கனமாகப் பற்று போட்டாலும் தலைவலி நிற்கும்.
நொச்சியிலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து. அச்சாற்றை இருபக்கப் பொட்டுகளிலும் கனமாகப் பூசலாம். கரிசலாங் கண்ணிச் சாற்றுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து 4 சொட்டு மூக்கில் விட்டாலும் தலைவலி குறையும்.
நெல்லிக் காயைப் பாலில் வேக வைத்து நெய் சேர்த்து அரைத்து பற்றுப்போடலாம். தேற்றாங் கொட்டையை முட்டையின் வெள்ளைக் கருவில் அரைத்துப் பற்றுப் போடலாம். வெற்றிலையை நைத்து இரு பொட்டுகளிலும் தடவலாம்.ஓர் இரும்புக் கரண்டியை அடுப்பில் காயவைத்து, நன்கு காய்ந்த பின், எலுமிச்சம் பழச் சாற்றை அதில் விட்டால், பொங்கி எழுந்து தணியும். அதை வேறோர் ஒரு இரும்புக் கரண்டியால் கிளறிவிட்டு இளஞ்சூடாகப் பொட்டுகளில் தடவலாம்.
கொஞ்சம் மிளகு. செம்மண், ஒரு மிளகாய் சேர்த்து அரைத்து ஓர் இரும்புக்கரண்டியில் போட்டுக் கொஞ்சம் தண்ணீர் விட்டு, குழம்பு போல் கொதிக்க வைத்து, அதை இரு பக்கப் பொட்டுகளிலும், நெற்றியிலும் பற்றுப்போட்டால் தலைவலி, தலைப்பாரம் நீங்கும்.
கொஞ்சம் மண்ணெண்ணெயில் சிறிது கற்பூரம் போட்டுக் குழப்பி அதை இரு பொட்டுகளிலும் தடவலாம். கொஞ்சம் மிளகு எடுத்து, தண்ணீர் விட்டு பட்டுப் போல் அரைத்து, ஒரு கரண்டியில் வைத்துச் சூடேற்றி, அத்துடன் கொஞ்சம் மண்ணெண்ணெய் விட்டுக் கிளறி, இரு பொட்டுக்களிலும் பற்றுப் போடலாம்.
0 Comments